தமிழர் திருநாள் முன்னிட்டு ஒரு கவிதை.
- techthambigrpofcmp
- Jan 14, 2021
- 1 min read
காலைக் கதிரவன் கண்விழித்து கதிர்களை பூமிதனில் உடுத்தி மங்கலமாய் பூமியை மின்னச் செய்து எட்டிப் பார்த்த விழியில் ஏமாற்றமில்லை! நாட்காட்டி அறிவுறுத்திய நல்ல நேரம் மதம் கொண்ட சாஸ்திரங்கள் விழி அறிந்த கடவுளாய் கதிரவன் ஒடுங்கிக் கொண்ட பகுத்தறிவுகள்! ஆங்காங்கே சிறுவர்கள் ஓட்டம் வேரிழந்த தித்திக்கும் கரும்புகள் நினைவிழந்த மஞ்சள் செடிகள் உயிர் கொண்ட அதிசயங்கள்! எங்கும் தேடியும் கிடைக்கவில்லை காணவில்லை அறிவிப்பு கொடுக்கலாமா? எங்கே சென்று தேடுவேன் ? எளிதாய் தென்படும் பொங்கல் செடியை! இணையதள தேடல் பயன் அளிக்கவில்லை! சகல வித காய் கறிகள் வானம் நோக்கி வாய் பிளந்த தேங்காய் புகை பரப்பி நிலை மறக்கும் பத்திகள் சாணத்திற்கும் இடம் உண்டு அடைக்கலம் கொடுத்த வாழை இழை! மூன்று கல் நாற்காலியில் அமர்ந்து விட்ட மண் பானை ஓய்வு அறியா கரங்களால் ஓய்ந்து விடாத தீ சுவலைகள்! உழைத்து விட்ட இரு கரங்கள் அதன் பலனாய் அதனுள் அரிசிகள் வேண்டுமென்றே கரம் கவிழ தடுமாறி விழுந்தன அரிசிகள்! சுட்டு விடும் தீயிலும் மவுனமாய் மண்பானை கொதிக்கும் நீரில் துள்ளிய அரிசிகள் தூண்டில் போட்ட அகப் பையில் நழுவுகின்ற அரிசிகள்! இன்னும் சற்று நேரம் தான் பொங்கல் பொங்கி விடும் வானிலை போன்ற பொங்கல் நிலை கணிப்பு சொன்ன இரு வரி இதழ்கள் ! வானிலை பலித்தாயிற்று இல்லை இல்லை - பொங்கிய நுரையில் பொங்கல் நிலை பலித்தாயிற்று கனத்த உச்சரிப்புடன் கற்பனை இல்லா கவிதையும் இதழ் வழியே வந்தாயிற்று! பொங்கலோ பொங்கல் ! அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ! மகிழ்வித்து மகிழ்வோமாக!
அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்துக்கள் !
Komentar